Tuesday, August 28, 2012

சுதந்திர தினம்



புராதானங்களுள் ஒன்றாகி விட்டதென் மொழி
தமிழ் ஆதரவாளன் தீவிரவாதியானான்
ஈழம் பேச அனுமதி மறுக்கிறது அரசாங்கம்
தமிழன் என்ற அடையாளமும் இல்லை
என் இனத்தில் பாதியை அழித்தாகிவிட்டது
சாவுக்கு பயந்து சிதறுண்டோம் சில்லரைகளாய்
நடைபிணங்கள் மட்டுமே நடமாடுகின்றன
என் உடன்பிறப்புகள் உயிருடன் புதைக்கப்பட்டும்
இன்னும் நான் இருக்கிறேன் இந்தியனாக
வெட்கம் கெட்ட இறையாண்மையுடன்









Saturday, April 21, 2012

பிறந்தநாள்



இந்த பூமியில் என் உடலும் உயிரும் ஒருசேர பிரவேசித்த தினம். என் தாய் என்னை அவள் கருவறையில் இருந்து கண்ணிமைக்குள் மாற்றி வைத்த தினம். என் தாய்க்கும் இந்த தரணிக்கும் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நாள். மனிதனின் இனப்பெருக்க தொடர் ஓட்டத்தில் நானும் ஓட துவங்கிய நாள். இத்தனை ஆண்டுகள் நான் வாழ்ந்ததற்கான அறிவிப்பு பலகை. நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதற்கும், செல்ல வேண்டிய பாதையை உற்று நோக்குதற்கும் உகந்த ஓர் ஒய்வு நாள். ஏதோ அறிஞர் கூறியது போல், காலத்தின் இறக்கைகளில் ஒரு அழகான சிறகே பிறந்தநாள்.

ஓர் ஆண்டில் முந்நூற்றி அறுபத்து நான்கு நாட்களும் ஆர்வமற்றவையாக இருப்பினும் இந்த நாளில் மட்டும் கொஞ்சம் மகிழ்ச்சியும் குதூகலமும் வந்து அப்பிக்கொள்கிறது. யாரெல்லாம் நம்மை வாழ்த்துவர், யாரெல்லாம் என் பிறந்தநாளை மறந்திடுவர் போன்ற எண்ணங்கள் மனதில் ஓட துவங்குகிறது. இது எனக்காக உருவான ஒரு நாளாக தோன்றுகிறது. இந்த நாளில் மற்ற நாட்களை விட நான் மிகவும் முக்கியமானவனாக தெரிகிறேன். இந்த நாள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மேல் தொடராதா என மனம் ஏங்குகிறது. இன்று ஒரு நாள் கண்டிப்பாக என் பிறந்தநாளை நினைவில் கொண்ட அனைவரும் என்னை ஒரு நொடியாவது நினைத்திருப்பர். இருப்பினும் இந்த நாள் என்னை கடந்து நேற்றாக மாறவே போகிறது. வயது கூடக்கூட இந்த நாளுக்கான காத்திருப்பும், எதிர்பார்ப்பும் குறைந்து தான் போகிறது.

பிறந்தநாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குவதும், மகிழ்ச்சியாக கொண்டாடுவதும் குழந்தைகள் தான். பள்ளிகளில் புதுத்துணி அணிவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. தீபாவளி, பொங்கல் விடுமுறைகளுக்கு பின் பள்ளி துவங்கும் முதல் நாள் அனைத்து குழந்தைகளும் புதுத்துணி அணிந்து வரலாம் என்ற விதி இருக்கும். அன்று பள்ளி முழுவதும் வானவில் பூசினாற்போல் எல்லோரும் வண்ண வண்ண ஆடைகளில் வந்திருப்பர். அதே போல் யாருக்காவது பிறந்தநாள் வந்தால் அந்த மாணவர் மட்டும் அன்று சீருடை விடுத்து புதுத்துணி அணிய அனுமதி உண்டு. பள்ளி நாட்களில் நான் அந்த நாளுக்காக காத்துக் கிடந்திருக்கிறேன். அது பிறந்தநாள் காணும் குழந்தை தனித்து, மிகவும் முக்கியமானவராக காட்சி தரும் நாள். பள்ளி வாயிற் காவலாளி முதல், தலைமை ஆசிரியர் வரை அனைவரும் அக்குழந்தையை வாழ்த்துவர். மாணவர்கள் ஒரு மிட்டாய் வேண்டியாவது கண்டிப்பாக வாழ்த்துவர். அன்று மட்டும் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை போல் உணர்ந்திருக்கிறேன். வகுப்பில் உள்ள அனைவரும் ஒரு சேர பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடுவார்கள். பிறந்தநாள் காணும் குழந்தை தன் வகுப்பில் படிக்கும் எல்லோருக்கும் மிட்டாய் கொடுக்கும். வீட்டில் அம்மா குழந்தைக்கு பிடித்த உணவுகள் சமைத்திருப்பாள். அன்று யாருமே பிறந்தநாள் பிள்ளையை திட்டமாட்டார்கள். விதவிதமான பரிசுகளும், புத்தாடையும் கிடைக்கும். அந்த நாள் முழுவதும் அந்த குழந்தையின் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த பெருமிதம் ஒட்டிக்கொண்டே இருக்கும். மிகவும் இனிமையான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவை.

கல்லூரி நாட்களில் பிறந்தநாளை ஒருவித பயத்துடனே எதிர்கொண்டிருக்கிறேன். காரணம் பிறந்தநாள் காண்பவருக்கு நண்பர்களிடமிருந்து செமத்தியாக அடி விழும். ஆனாலும் அதிலும் ஒரு இன்பம் இருக்கவே செய்தது. அதிகமான நண்பர்கள் இருந்த எனக்கு அடியை போலவே வாழ்த்துகளும் நிறையவே கிடைத்தன. பிறந்தநாள் கொண்டாட்டங்களை எனக்கு தெரியாமல் ஏற்பாடு செய்வதாக நினைத்து மறைத்து மறைத்து பல காரியங்கள் செய்வர். அத்தனையும் எனக்கு தெரிந்திருந்தும், நானும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் நடிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கவே செய்தது. நம் நண்பர்கள் நம்மை மகிழ்விப்பதர்க்காக மெனக்கெடுகிறார்கள் என்பது மிகவும் இனிமையான உணர்வு தான். என் கல்லூரி முதல் ஆண்டில் என் பிறந்தநாளன்று என் நண்பர்கள் அனைவரையும் என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். முதல் ஆண்டு என்பதால் எல்லோருடனும் அதிக பழக்கம் இல்லை. இருப்பினும் நான் அழைத்ததற்காக ஒரு பத்து பேர் வந்திருந்தனர். எனது சிறிய வீட்டில் அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து வைத்தாள் என் தாய். அன்றென்னவோ அவள் சமைத்த உணவில் அவ்வளவு சுவை. உணவருந்தி முடிந்ததும் என் தோழி ஒருத்தி தன் இனிய குரலில் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தாள். வழக்கமான கேலி கிண்டல் பேச்சுகளும், எனக்கான பிறந்தநாள் அடிகளும் கிடைத்தது. அனைவரும் வயிறார உண்டு, வாய் விட்டு சிரித்து, மனதார வாழ்த்திவிட்டு சென்றனர். என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு பிறந்தநாளது.

ஒருவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. அது அவன் வாழ்வை இன்னும் ஒரு ஆண்டு வாழ்ந்து வந்த முத்திரை. தன் வாழ்வு அர்த்தமானதாக இருப்பதற்கான அடையாளம். இந்த நாள் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் தம் வாழ்வின் இன்பத்தை பகிர்வதற்கான தருணம். ஒவ்வொரு பிறந்தநாளும் நாம் இதுவரை செல்லாத பாதையை கடப்பதற்கான வலிமையை தருகிறது. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம் வயதுடன் அனுபவமும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு பிறந்தநாளும் நாம் பால்யத்திடமிருந்து பல மைல் தூரம் பிரிந்துகொண்டே இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது. குழந்தை பருவத்தில் ஒவ்வொரு பிறந்தநாளிலும் அதன் முடிவை பற்றிய வருத்தமும், அடுத்த பிறந்தநாளின் எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் வளர்ந்தபின் பிறந்தநாளன்று, இதுவரை முடிவடைந்த, கடந்துவந்த பிறந்தநாள் நிகழ்வுகளை அசைபோடவே மனம் விரும்புகிறது. சிறுவயதில் நாம் சீக்கிரம் வளரவேண்டும் என்று ஆசைபடுகிறோம், ஆனால் பெரியவர்களான பின் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என ஏங்குகிறோம். இதே ஏக்கத்துடன் முடிவடைந்தது என் பிறந்தநாளும் இன்று.

Wednesday, April 18, 2012

மழை

வான்முகிலும் கருத்தொருமிக்க 
இடிமுழக்கம் தாளம் கொட்ட
மின்னல் கீற்றாய் ஒளிபரப்ப
காகங்கள் கானம் பாட
மயிலெல்லாம் நடனமாட
வனமெல்லாம் தலையசைக்க
நடந்தேறியது அரங்கேற்றம்













Wednesday, April 11, 2012

அம்மா


அன்பே உருவாகி நின்று,
ஆகாரம் அமுதென படைத்து,
இல்லறம் பண்புடன் காத்து,
ஈன்றெடுக்க ஈருயிர் சுமந்து,
உயர் பண்புடன் வளர்க்க,
ஊரார் மெச்சிட இறக்க,
எத்துயரும் தாங்கி நின்று,
ஏனைய ஆசைகள் கொன்று,
ஐந்தறிவை ஆறு என்றாக்கி,,
ஒப்பில்லா உயிர் தந்தாயே,
ஓம்காரம் நீயே தாயே
ஔதாரியத்தின் உருக்கொண்டாயே ...










சுய மரணம்


வாழ்வினை நன்கு ரசித்தவன்,
இன்று மரணத்தை ருசிக்க முயல்கிறேன் ...
முடிவே, என்னை நீ நெருங்குமுன்
நானே உன்னை அரவணைக்க பயில்கிறேன் ... 

இது நான் தொடங்கும் யாத்திரை
போகாத வழியென்றறிந்தே புறப்பட்டேன் ...
உலக வாழ்வில் இல்லா சுதந்திரம்,
இங்குண்டு என்பதை உணர்ந்திட்டேன் ... 


இது கோழைத்தனம் என்று கூறுவோர்,
எத்தனை பேர் இறந்தவர்கள் ?
இறப்பிற்கு பயந்து வாழ்வது நன்றெனில்,
வாழ்வை உணர்ந்தபின் மரிப்பதும் நன்றே ...


என் பிறப்பைத்தான் நான் தீர்மானிக்கவில்லை,
இறப்பாவது என் முடிவாகட்டும் ...
காதலுக்கும், கடனுக்கும் இறப்பவர்க்கு மத்தியில்,
என் மரணம் விருப்புக்காக இருக்கட்டும் .







என் கவிதைகள்


என் உறக்கத்தில் தொலைந்து போன இரவுகள்
என் விடியலில் விழித்தெழுந்த கனவுகள் 
என் மௌனத்தில் மறைந்து போன வார்த்தைகள்
என் பயணத்தில் கடந்து போன பாதைகள்
என் சோகத்தில் கரைந்து போன கண்ணீர்
என் இன்பத்தில் சிதறிப் போன புன்னகை
அனைத்தும் என் கவிதைகளே 








கருவறுப்பு


Friday, March 30, 2012

இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய்



உன் காட்டை இடித்து கட்டிடம் வளர்க்கிறார்கள்,
பூமியின் போர்வையிலே ஓட்டையிட்டு சிரிக்கிறார்கள்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????

ஓராயிரம் காரியம் செய்துன்னை சூடாக்கி,
பனிப்பாறை கரைத்துன்னை அழவைத்த போதிலும்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????

காற்றையும் கெடுத்து, கடலையும் கெடுத்து,
மண்ணையும் விண்ணையும் புண்ணாக்கிய பின்னும்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????

வேட்டையாடி கொண்டு வந்து உன் பிள்ளைகளை,
கொன்று தின்று கொழுத்த பின்னும்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????

நீ வாழக் கொடுத்த இடத்தையெல்லாம் வாடகைக்கு விட்டுவிட்டு,
உன்னையே இடம் பெயர்க்க பார்க்கிறார்கள் ...
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????






Thursday, March 29, 2012

நிழல்


நம் அனைவருக்குமே நிழல் உண்டு. நம்மிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட உருவமாய் மண்ணில் வரையப்பட்டிருக்கும் நிழல், உண்மையில் வெறும் ஒரு வடிவம் மட்டுமல்ல. அது ஒரு மனிதனின் மறைக்கப்பட்ட உண்மைகளின் அச்சு. நாம் விலகி ஓட நினைக்கும் பரிமானம். நம் மனதிற்குள் வாழும் பல மனிதர்களின் கோர முகம். அது ஒரு வெறுமை. அது ஒரு ஒளியின்மை. அது சொல்ல வருவதெல்லாம் நம்மை நாமே ஏற்றுக்கொள்ள; உண்மையிலிருந்து விலகி ஓடாமல், உள்ளுக்குள் அதை ஒடுக்காமல் ஒத்துக்கொள்ள. நிழல் நம் எதிரி இல்லை, அது உண்மைகளின் பிரதிபலிப்பு. 

நிழல் தவிர, நாம் சொந்தம் என்று சொல்லிக்கொள்ளும் எதுவுமே நம் சொந்தமில்லை. நாம் பிறக்கையில் நம்முடனே பிறந்து, இறக்கையில் மறைந்து போகும் இந்த நிழல் தான் நாம் உணராத நம் சொந்தம். யாராலும் பிரிக்க முடியாத, அழிக்க முடியாத, துரத்த முடியாத ஒரே சொந்தம். நம்மால் ஒதுக்கப்பட்டாலும் என்றும் அது நம்மை பிரிவதில்லை. எந்த உறவுக்கு நடுவிலும் ஒரு எல்லை வேண்டும் என்று ஒரு விதி உண்டு. நிழலுக்கும் அது புரிந்தே இருக்கிறது. ஒளியில்லா நேரங்களில் நம் தனிமைக்கு வழிவிடுகிறது. நிழல் நம் வழிகாட்டி, நம் உறுதுணை. மனம் தளராமல் வாழ்க்கையை எதிர்க்கொள்ள நம்மால் உருவான உதாரணம். இன்ப துன்பங்களை ஒருங்கே அனுபவித்து மீண்டும் உயித்தெழ செய்யும் அபூர்வம்.

நிழல் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் நாம் பெற்றிருக்கும் மனநிலையை காட்டுகிறது. வெயில் குறைந்திருக்கும் காலையும் மாலையும் புத்துணர்வுடன் இருக்கும் நம்மை போலவே வளர்ந்து நீண்டிருக்கும். பகலில் அயர்ந்து சோர்ந்திருக்கும் நம்மை போலவே குறுகி போயிருக்கும். வெயிலில் தாகத்தை தணிக்க நாம் கால் வழியே அருந்தும் நீராகவே உணர்கிறேன் நிழலை. நாம் குடித்த மிச்சம் தான் நிழலாய் நிலத்தில் கிடக்கிறது போலும். அதனால் தான் சற்று சிறுத்து போகிறதென்றே தோன்றுகிறது. இரவு பூமியின் நிழல். அந்த நிழலில் தான் நாம் அனைவரும் உறங்குகிறோம். நம்முடன் சேர்ந்து நம் நிழலும் உறங்குகிறது. காலையில் முன் செல்லும் தந்தையாகவும், மாலையில் தோல் சேரும் நண்பனாகவும், இரவில் நம்முள் உறங்கும் குழந்தையாகவும் துணை நிற்கிறது நிழல். இரவில் ஒரு சிறு விளக்கின் முன்னே நமக்கு சேவை செய்ய காத்திருக்கும் பூதம் போல் வளர்ந்து நின்று வணங்குகிறது. என்றாவது ஒரு காலை நாம் எழுகையில் நம்மைவிட்டு இந்நிழல் பிரிந்ததுண்டா? அப்படி நடந்தால் அன்று நாம் இறந்திருப்போம்.

நம்மை படைத்த இயற்கையுடன், நாம் வாழும் இந்த மண்ணுடன் நம்மைவிட அதீத உறவு கொண்டிருப்பது நிழல் தான். நாம் வாடகை தாயாக இருக்க, சூரியனுக்கும் பூமிக்கும் பிறந்த சிசுவே நிழல். அது மொத்த பூமியையும் கவர்ந்திருக்கும் போர்வை. இயற்கை தினமும் நிழல்களை அழித்து அழித்து வரைந்து கொண்டே இருக்கிறது, ஒரு ஓவியனை போல. இயற்கையின் நிழல் புத்தகத்தில் நமது பக்கங்களும் இங்கு வாழ்ந்து மறைந்த எண்ணற்ற உருவங்களின் பக்கங்களுடன் ஒன்றாய் உள்ளது. நாம் எழுந்து நிற்கையில் இந்த மண்ணுக்கும் கதிரவனுக்கும் நடுவில் நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதே நிழல். இந்த உயிருக்கும், உடலுக்கும், நிழலுக்கும் நாம் மட்டுமே பொறுப்பல்ல. சூரியனும் பூமியும் நம் மூலம் நிழலை உருவாக்குவதை போல நம்மை உருவாக்கியதும் இந்த இயற்கை தான். அது ஒரு குறியீடு. நாம் என்றுமே இயற்கையால் ஆட்கொள்ளப்பட்டுள்ளோம் என்பதர்கான குறியீடு. நாம் நாமாகவும் பூமி பூமியாகவும் அதன் மேல் நம் வாழ்வையும் காட்டும் குறியீடு. ஒளிக்கு இணையான வேகத்துடன் எதுவுமே செல்ல முடியாது என்கிறது அறிவியல். ஆனால் நிழலால் முடியும் என்பது சாமானியன் கூட அறிந்த உண்மை.

என் உருவத்தையும், என் அசைவுகளையும் என்னுடன் சேர்ந்து தூக்கி சுமக்கிறது என் நிழல். நிழல் தன் உருவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது. சில சமயம் சுத்தமாக மறைந்தும் விடுகிறது. ஆனால் மீண்டும் எங்கிருந்தோ பிறக்கிறது. அதற்கு நிலையான உருவமில்லை, குரலில்லை, வண்ணமுமில்லை. ஆனால் உலகின் எண்ணற்ற பரிமாணங்களையும் ,சத்தங்களையும், வண்ணங்களையும் தன் இருளுக்குள் ஒளித்து வைத்துள்ளது. பல தருணங்களில் என் தோழனாகவும், ஆசானாகவும், சில சமயங்களில் எதிரியாகவும் கூட துணை நிற்பது நிழல். என்னை விட ஒரு பெரிய பொருள் எனக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும்போதெல்லாம் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதன் நிழல் என்னை மறைக்கிறது. என் நிழல் அங்கே தொலைந்து போகிறது. மறுபடி அதன் வருகை எனக்கு இயற்கையின் இருப்பை நினைவூட்டுகிறது.

குழந்தையாய் இருந்த பொழுது நிழலுடன் நாம் விளையாடுகிறோம். அது ஒரு பொம்மையாக தோன்றுகிறது. நாம் அதை பிடிக்க முனையும் போதெல்லாம் நம்மை விட்டு விலகி செல்கிறது. ஆனால் நிழலை புரிந்து கொண்டபின் அது நம்மை விட்டு பிரிவதே இல்லை. தோளோடு தோள் சேர்த்து நடமாடுகிறது. நம்முடனே வாழ்கிறது. மரணம் என்ற வார்த்தையின் பொருள் புரிந்த நாளிலிருந்தே அதன் நிழல் நம் மேல் தோய்கிறது. மரணத்தின் நிழலே வாழ்க்கை. மரணத்தில் நம் உடல் மட்டுமே அழிகிறது, ஆனால் நம் வாழ்வின் நிழல் இங்கேயே தங்கிவிடுகிறது. நாம் மறைந்த பின்னும் வாழ்வது, இந்த மண்ணில் நாம் வரைந்து சென்ற நிழல்கள் மட்டுமே.நம் அனைவருக்குமே நிழல் உண்டு. நம்மிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட உருவமாய் மண்ணில் வரையப்பட்டிருக்கும் நிழல், உண்மையில் வெறும் ஒரு வடிவம் மட்டுமல்ல. அது ஒரு மனிதனின் மறைக்கப்பட்ட உண்மைகளின் அச்சு. நாம் விலகி ஓட நினைக்கும் பரிமானம். நம் மனதிற்குள் வாழும் பல மனிதர்களின் கோர முகம். அது ஒரு வெறுமை. அது ஒரு ஒளியின்மை. அது சொல்ல வருவதெல்லாம் நம்மை நாமே ஏற்றுக்கொள்ள; உண்மையிலிருந்து விலகி ஓடாமல், உள்ளுக்குள் அதை ஒடுக்காமல் ஒத்துக்கொள்ள. நிழல் நம் எதிரி இல்லை, அது உண்மைகளின் பிரதிபலிப்பு.