Saturday, April 21, 2012

பிறந்தநாள்



இந்த பூமியில் என் உடலும் உயிரும் ஒருசேர பிரவேசித்த தினம். என் தாய் என்னை அவள் கருவறையில் இருந்து கண்ணிமைக்குள் மாற்றி வைத்த தினம். என் தாய்க்கும் இந்த தரணிக்கும் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நாள். மனிதனின் இனப்பெருக்க தொடர் ஓட்டத்தில் நானும் ஓட துவங்கிய நாள். இத்தனை ஆண்டுகள் நான் வாழ்ந்ததற்கான அறிவிப்பு பலகை. நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதற்கும், செல்ல வேண்டிய பாதையை உற்று நோக்குதற்கும் உகந்த ஓர் ஒய்வு நாள். ஏதோ அறிஞர் கூறியது போல், காலத்தின் இறக்கைகளில் ஒரு அழகான சிறகே பிறந்தநாள்.

ஓர் ஆண்டில் முந்நூற்றி அறுபத்து நான்கு நாட்களும் ஆர்வமற்றவையாக இருப்பினும் இந்த நாளில் மட்டும் கொஞ்சம் மகிழ்ச்சியும் குதூகலமும் வந்து அப்பிக்கொள்கிறது. யாரெல்லாம் நம்மை வாழ்த்துவர், யாரெல்லாம் என் பிறந்தநாளை மறந்திடுவர் போன்ற எண்ணங்கள் மனதில் ஓட துவங்குகிறது. இது எனக்காக உருவான ஒரு நாளாக தோன்றுகிறது. இந்த நாளில் மற்ற நாட்களை விட நான் மிகவும் முக்கியமானவனாக தெரிகிறேன். இந்த நாள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மேல் தொடராதா என மனம் ஏங்குகிறது. இன்று ஒரு நாள் கண்டிப்பாக என் பிறந்தநாளை நினைவில் கொண்ட அனைவரும் என்னை ஒரு நொடியாவது நினைத்திருப்பர். இருப்பினும் இந்த நாள் என்னை கடந்து நேற்றாக மாறவே போகிறது. வயது கூடக்கூட இந்த நாளுக்கான காத்திருப்பும், எதிர்பார்ப்பும் குறைந்து தான் போகிறது.

பிறந்தநாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குவதும், மகிழ்ச்சியாக கொண்டாடுவதும் குழந்தைகள் தான். பள்ளிகளில் புதுத்துணி அணிவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. தீபாவளி, பொங்கல் விடுமுறைகளுக்கு பின் பள்ளி துவங்கும் முதல் நாள் அனைத்து குழந்தைகளும் புதுத்துணி அணிந்து வரலாம் என்ற விதி இருக்கும். அன்று பள்ளி முழுவதும் வானவில் பூசினாற்போல் எல்லோரும் வண்ண வண்ண ஆடைகளில் வந்திருப்பர். அதே போல் யாருக்காவது பிறந்தநாள் வந்தால் அந்த மாணவர் மட்டும் அன்று சீருடை விடுத்து புதுத்துணி அணிய அனுமதி உண்டு. பள்ளி நாட்களில் நான் அந்த நாளுக்காக காத்துக் கிடந்திருக்கிறேன். அது பிறந்தநாள் காணும் குழந்தை தனித்து, மிகவும் முக்கியமானவராக காட்சி தரும் நாள். பள்ளி வாயிற் காவலாளி முதல், தலைமை ஆசிரியர் வரை அனைவரும் அக்குழந்தையை வாழ்த்துவர். மாணவர்கள் ஒரு மிட்டாய் வேண்டியாவது கண்டிப்பாக வாழ்த்துவர். அன்று மட்டும் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை போல் உணர்ந்திருக்கிறேன். வகுப்பில் உள்ள அனைவரும் ஒரு சேர பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடுவார்கள். பிறந்தநாள் காணும் குழந்தை தன் வகுப்பில் படிக்கும் எல்லோருக்கும் மிட்டாய் கொடுக்கும். வீட்டில் அம்மா குழந்தைக்கு பிடித்த உணவுகள் சமைத்திருப்பாள். அன்று யாருமே பிறந்தநாள் பிள்ளையை திட்டமாட்டார்கள். விதவிதமான பரிசுகளும், புத்தாடையும் கிடைக்கும். அந்த நாள் முழுவதும் அந்த குழந்தையின் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த பெருமிதம் ஒட்டிக்கொண்டே இருக்கும். மிகவும் இனிமையான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவை.

கல்லூரி நாட்களில் பிறந்தநாளை ஒருவித பயத்துடனே எதிர்கொண்டிருக்கிறேன். காரணம் பிறந்தநாள் காண்பவருக்கு நண்பர்களிடமிருந்து செமத்தியாக அடி விழும். ஆனாலும் அதிலும் ஒரு இன்பம் இருக்கவே செய்தது. அதிகமான நண்பர்கள் இருந்த எனக்கு அடியை போலவே வாழ்த்துகளும் நிறையவே கிடைத்தன. பிறந்தநாள் கொண்டாட்டங்களை எனக்கு தெரியாமல் ஏற்பாடு செய்வதாக நினைத்து மறைத்து மறைத்து பல காரியங்கள் செய்வர். அத்தனையும் எனக்கு தெரிந்திருந்தும், நானும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் நடிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கவே செய்தது. நம் நண்பர்கள் நம்மை மகிழ்விப்பதர்க்காக மெனக்கெடுகிறார்கள் என்பது மிகவும் இனிமையான உணர்வு தான். என் கல்லூரி முதல் ஆண்டில் என் பிறந்தநாளன்று என் நண்பர்கள் அனைவரையும் என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். முதல் ஆண்டு என்பதால் எல்லோருடனும் அதிக பழக்கம் இல்லை. இருப்பினும் நான் அழைத்ததற்காக ஒரு பத்து பேர் வந்திருந்தனர். எனது சிறிய வீட்டில் அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து வைத்தாள் என் தாய். அன்றென்னவோ அவள் சமைத்த உணவில் அவ்வளவு சுவை. உணவருந்தி முடிந்ததும் என் தோழி ஒருத்தி தன் இனிய குரலில் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தாள். வழக்கமான கேலி கிண்டல் பேச்சுகளும், எனக்கான பிறந்தநாள் அடிகளும் கிடைத்தது. அனைவரும் வயிறார உண்டு, வாய் விட்டு சிரித்து, மனதார வாழ்த்திவிட்டு சென்றனர். என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு பிறந்தநாளது.

ஒருவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. அது அவன் வாழ்வை இன்னும் ஒரு ஆண்டு வாழ்ந்து வந்த முத்திரை. தன் வாழ்வு அர்த்தமானதாக இருப்பதற்கான அடையாளம். இந்த நாள் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் தம் வாழ்வின் இன்பத்தை பகிர்வதற்கான தருணம். ஒவ்வொரு பிறந்தநாளும் நாம் இதுவரை செல்லாத பாதையை கடப்பதற்கான வலிமையை தருகிறது. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம் வயதுடன் அனுபவமும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு பிறந்தநாளும் நாம் பால்யத்திடமிருந்து பல மைல் தூரம் பிரிந்துகொண்டே இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது. குழந்தை பருவத்தில் ஒவ்வொரு பிறந்தநாளிலும் அதன் முடிவை பற்றிய வருத்தமும், அடுத்த பிறந்தநாளின் எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் வளர்ந்தபின் பிறந்தநாளன்று, இதுவரை முடிவடைந்த, கடந்துவந்த பிறந்தநாள் நிகழ்வுகளை அசைபோடவே மனம் விரும்புகிறது. சிறுவயதில் நாம் சீக்கிரம் வளரவேண்டும் என்று ஆசைபடுகிறோம், ஆனால் பெரியவர்களான பின் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என ஏங்குகிறோம். இதே ஏக்கத்துடன் முடிவடைந்தது என் பிறந்தநாளும் இன்று.

No comments:

Post a Comment